தேசிய வேளாண்மை உயர் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல்: தமிழ்நாடு அரசு ₹5 கோடி நிதியுதவி

சென்னை: டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை உயர்கல்வி திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி ₹24.86 கோடி நிதி அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு ₹5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி கற்றல் முறையை மேம்படுத்தி, வேளாண் வணிகத்தை நிர்வகிப்பதற்கு தலைவர்களை உருவாக்கவும், வேலை தேடும் மாணவர்களை காட்டிலும் வேலை வழங்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மொழி கற்றல் பயிற்சி கூடங்கள், பெரிய தரவு பகுப்பாய்வு கூடம், விரிவாக்க கூடம், கணினி அறிவு சார்ந்த துல்லிய வேளாண்மை பயிற்சி கூடங்களும் நிறுவப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இயங்கி வரும் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இயங்க கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வி வளாகம் பசுமைமயமாக்கல், சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், சமுதாய கோட்பாடுகளை கடைபிடித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயலாக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்நிகர் உண்மை ஆய்வு கூடத்தை நேற்று பார்வையிட்டு அங்கு தயாரிக்கப்பட்ட 15 வேளாண் சார்ந்த பாடத்தொகுதிகளை பற்றி தெரிந்து கொண்டார். மாணவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பாடத் தொகுதியை அமைச்சருக்கு செயல்படுத்தி காட்டினர். பல்கலைக்கழகத்தில் உள்ள மொழி கற்றல் பயிற்சி கூடத்தை அமைச்சர் பார்வையிட்டார். இங்கு மாணவர்கள் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியில் கலந்துரையாடினர். மேலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேச பயிற்சி எடுத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறும் 37 மாணவர்கள் நிகழ்நிலை (ளிஸீறீவீஸீமீ) கூட்டத்தின் மூலம் அமைச்சருக்கு தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளையும் அதனால் அடையக்கூடிய பலன்களையும் தெரிவித்தனர். துபாய், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்கொரியா, மலேசியா நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

The post தேசிய வேளாண்மை உயர் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல்: தமிழ்நாடு அரசு ₹5 கோடி நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: