திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் மேம்படுத்தவும் முடிவு-உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.உலக பிரசித்தி பெற்ற திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக திருப்பதி அலிபிரியிலிருந்து சாலை மார்க்கமாகவும், நடந்து செல்லும் மலைப்பாதையிலும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோன்று ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையிலும் பக்தர்கள் சோதனைக்கு பிறகு திருமலைக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு நுழைவாயில் முதல் கோயில் ராஜகோபுரம் வரை இரண்டு முறை சோதனை செய்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருமலை முழுவதும் 2600 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமலை பாதுகாப்பில் உள்ளூர் போலீசாருடன் தேவஸ்தான விஜிலென்ஸ், ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் திருமலைக்கு தீவிரவாதிகள், சமூக விரோதிகள் யாரும் வனப்பகுதி வழியாக நுழையாமல் இருப்பதற்காக திருமலை முழுவதும் 10 கி.மீ சுற்றளவில் 20 அடி உயரத்திற்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர 20 ஏக்கரில் உள்ள ஏழுமலையான் கோயில் சுற்று பகுதியில் இருக்கும் நான்கு மாட விதியை சுற்றி இன்னர் காரிடார் எனும் உள்வட்ட பாதுகாப்பு இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நான்கு மாடவிதியில் பக்தர்கள் எந்தவித சோதனையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வைகுண்டம் காத்திருப்பு அறையில் இரண்டு கட்ட சோதனையை மீறி பக்தர் ஒருவர் செல்போனை மறைத்து கொண்டு சென்று கோயிலுக்குள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

மேலும், திருப்பதி எஸ்பி பரமேஸ்வருக்கு இமெயில் மூலம் திருமலையில் தீவிரவாதிகள் இருப்பதாக இமெயில் வந்தது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக எந்தெந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் எவ்வாறு மேம்படுத்த எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை திருமலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை வந்த அதிகாரிகள் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசாருடன் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆந்திர அரசின் உள்துறை தலைமைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா முன்னிலையில் உயர்மட்ட பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். திருமலையின் பலத்த பாதுகாப்பிற்காக அனைத்து பாதுகாப்பு படைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஹரிஷ் குமார் குப்தா கருத்து தெரிவித்தார்.

முன்னதாக தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் மற்றும் திருப்பதி எஸ்பி பரமேஷ்வர் ஆகியோர் தனித்தனியாக தற்போதுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர். இதில் அனந்தபூர் சரக டிஐஜி அம்மிரெட்டி, ஐஎஸ்டபிள்யூ சிறப்பு அதிகாரி சசிதர், மாநில புலனாய்வு பிரிவு, உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு, ஆக்டோபஸ், எஸ்பிஎப், மாவட்ட போலீஸ், வனம், தீயணைப்பு மற்றும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேவஸ்தானம் சார்பில் இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், முதன்மை பொறியாளர் நாகேஸ்வரராவ், எஸ்.இ. ஜெகதீஸ்வர் ரெட்டி, சுகாதார அலுவலர் டாக்டர். ஸ்ரீதேவி, விஜிலென்ஸ் அதிகாரிகள் பாலி, மனோகர், கிரிதர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இரண்டு நாட்கள் திருமலையில் தங்கி அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து தேவஸ்தானத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேவஸ்தானத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் மேம்படுத்தவும் முடிவு-உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: