திருவண்ணாமலை, மே 24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்₹2.16 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. அறநிலையத்துறை உதவி ஜோதிலட்சுமி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, உண்டியலில் ₹2 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 221யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். 165 கிராம் தங்கம், 2,213 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் ₹2 கோடியை கடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றதால் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. எனவே, இந்த மாத உண்டியல் காணிக்கை ₹2.16 கோடியாக உயர்ந்திருக்கிறது.
The post அண்ணாமலையார் கோயிலில் ₹2.16 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.