முட்டை விலை மேலும் உயரும்

நாமக்கல், மே 24: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக என்இசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவரும், என்இசிசி நாமக்கல் மண்டல துணைத்தலைவருமான சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை நன்றாக உள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லை. எனவே, ஐதராபாத் விலை இறக்கத்தை கண்டு பண்ணையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. சத்துணவு முட்டை கொள்முதல் வரும் நாட்களில் தொடங்க உள்ளது. தென் மேற்கு பருவமழை குறுகிய காலத்தில் வர இருக்கிறது. மேற்கு கடற்கரை மீன்பிடி தடை ஜூன் 15 முதல் ஆரம்பமாக உள்ளதாலும், வரும் நாட்களில் முட்டைக்கான தேவை மேலும் அதிகரிக்கும்.

அதேவேளையில், இந்திய முட்டைக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் புதிய சந்தைகளுக்கு முட்டை அனுப்புவதற்கு முட்டை ஏற்றுமதியாளர் சங்கம் முலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அடுத்து வரும் நாட்களில் முட்டைக்கான தேவை அதிகரிக்கும். எனவே, கோழிப்பண்ணையாளர்கள் என்இசிசி அறிவிக்கும் விலைக்கு மட்டுமே, முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும். அறிவிக்கப்படும் விலை ரொக்க விற்பனை விலை என்பதை கருத்தில் கொண்டு, முட்டை விற்பனை செய்ய வேண்டும். ஐதராபாத், விஜயவாடா மற்றும் ஹோஸ்பட் மண்டல தலைவர்களுடன் முட்டை விலை குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த மண்டலங்களில் முட்டை விலை நாளை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். எனவே பண்ணையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. வரும் நாட்களில், நாமக்கல்லில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முட்டை விலை மேலும் உயரும் appeared first on Dinakaran.

Related Stories: