37 கோயில்கள் புனரமைக்கப்படும் தொல்லியியல் அலுவலர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

கண்ணமங்கலம், மே 23: திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 கோயில்கள் புனரமைக்கப்படும் என்று தொல்லியியல் துறை அலுவலர் சேகர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட சிதிலமடைந்த கோயில்கள் சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இணை ஆணையர் குமரேசன், ஆய்வாளர் முத்துசாமி உத்தரவின்படி சிதிலமடைந்த கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், ராமநாத ஈஸ்வரர் கோயில், திரவுபதியம்மன் கோயில்களை மாவட்ட தொல்லியியல் அலுவலர் சேகர் ஆய்வு செய்து பேசியதாவது: கிராமங்களில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட சிதிலமடைந்த கோயில்களை ₹2 லட்சத்தில் சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கண்ணமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் ராஜகோபுரம் உயர்த்தி கட்டுவதற்கும், கோயில் உள் வளாகத்தில் உள்ள சிமெண்ட் கூரையை அகற்றி கான்கிரிட் தளம் அமைக்கவும், கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் ராமநாத ஈஸ்வரர் கோயில், திரவுபதியம்மன் கோயில்கள் சீரமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும். மாவட்டத்தில் இந்தாண்டில் 37 கோயில்கள் புனரமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது உதவியாளர் ராஜ்குமார், விழா குழு தலைவர் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் கோவர்த்தனன், பேரூராட்சி துணை தலைவர் குமார், கவுன்சிலர் முரளி, துணைச்செயலாளர் மணியரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

The post 37 கோயில்கள் புனரமைக்கப்படும் தொல்லியியல் அலுவலர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: