பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு திருவண்ணாமலையில் பரபரப்பு தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி மோசடி

திருவண்ணாமலை, மே 23: செய்யாறில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். செய்யாறு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம் தலை தீபாவளி சிறு சேமிப்பு, சூப்பர் மார்க்கெட் மளிகை பொருட்கள் சிறு சேமிப்பு, தங்க மாளிகை சிறு சேமிப்பு என்ற பெயரில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை நடத்தி வந்தனர். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் வந்தவாசி, காஞ்சிபுரம் ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்தனர். திடீரென இந்த நிறுவனம் மூடப்பட்டது. அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். எனவே, இந்த நிறுவனத்தில் பணத்தை சேமித்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அருகே திரண்டனர். அப்போது, அங்கு வந்த டிஎஸ்பி கனகேசனிடம் முறையிட்டு மனு அளித்தனர்.

அதில், தெரிவித்திருப்பதாவது: செய்யாறு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்தோம். அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டு பிறரையும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்குமாறு தெரிவித்தனர். திட்டங்களில் சேர்ந்தால் பரிசு பொருட்களுடன் சேமிப்பு தொகையை விட கூடுதலான பலன்கள் வழங்கப்படும் என்றனர். அதை நம்பி நாங்களும் முகவர்களாக செயல்பட்டு ஏராளமான பொதுமக்களை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தோம். திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தற்போது நாங்களும் எங்கள் மூலம் பணம் செலுத்திய பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தகராறு செய்கின்றனர். நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம். எனவே, நிதி நிறுவனத்தில் சேமித்த பல கோடி ரூபாய் பணத்தை மீட்டு தர வேண்டும். மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையொட்டி, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு திருவண்ணாமலையில் பரபரப்பு தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: