அண்ணாநகர்: வில்லிவாக்கம் சாத்தான்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் பிச்சைக்காரர் ஒருவர் சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். காரின் பின்னே பைக்கில் வந்த வாலிபர் காரின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு கால் எழும்பு முறிந்தது. தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர் தனபால் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிச்சைக்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, விபத்தில் இறந்துபோனவர் வில்லிவாக்கம் பகுதியில் பிச்சை எடுத்து அப்பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் வசித்து வந்துள்ளார் என்பதும், படுகாயம் அடைந்தவர் சென்னை ஆவடியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வரும் டில்லிபாபு (25) என்பதும் தெரியவந்தது. டில்லிபாபு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணிபுரிவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: கோயம்பேடு பூ மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு வாலிபர் அசுரவேகத்தில் பைக் ஓட்டி வந்து சென்டர் மிடியனில் மோதினார். இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், விபத்தில் இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (25) என்பது தெரிய வந்தது. இவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி லோடு வேன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருவேற்காடு பகுதியில் இருந்து பைக்கில் புறப்பட்டு கோயம்பேடு பூ மார்க்கெட் அருகே அசுரவேகத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
The post தறிகெட்டு ஓடிய கார் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி: காவலருக்கு கால் எலும்பு முறிந்தது appeared first on Dinakaran.