தண்டையார்பேட்டை மண்டலத்தில் குடிநீர் மாசு கண்டறிய நவீன இயந்திரம்: கலந்தாய்வு கூட்டத்தில் தகவல்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் குடிநீர் மாசுபடுவதை கண்டறிய நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள காரணத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னை வராமல் இருக்கவும், தடையின்றி குடிநீர் வழங்கவும், சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் பிரச்னை, கழிவுநீர் அடைப்பு, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது, புதிய குடிநீர் குழாய் அமைத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். குடிநீர் வாரிய தலைமை செயற்பொறியாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மேலும் 4வது மண்டல குடிநீர் வாரிய பகுதி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில், 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 10 வார்டுகளில் தடையின்றி குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது அடுத்த மாதம் 180 இடங்களில் புதிதாக குடிநீர் குழாய் மாற்றி அமைப்பது, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ரூ.18 கோடி செலவில் நீரேற்று நிலையம் தொடங்கப்படுவது, பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றுவது, குடிநீரில் கழிவுநீர் கலந்து வராதவாறு நடவடிக்கை மேற்கொள்வது, மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் எந்தப் பகுதியில் குடிநீர் மாசுபட்டுள்ளது என்பதை எளிதில் சோதனை செய்யக்கூடிய நவீன இயந்திரம் முதல் முறையாக 4வது மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ராஜிவ்காந்தி நகர் பகுதியில் இந்த சோதனை முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதேபோல் படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் இந்த சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து குடிநீர் வாரிய தலைமை செயற்பொறியாளர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு வார்டிலும் உள்ள பொறியாளர்கள் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் குடிநீர் கிடைக்க மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்று உத்தரவிட்டார்.

The post தண்டையார்பேட்டை மண்டலத்தில் குடிநீர் மாசு கண்டறிய நவீன இயந்திரம்: கலந்தாய்வு கூட்டத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: