சென்னை கோட்டத்தில் தலா ரூ.11 கோடியில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு தலா ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாக, முகப்புப்பகுதி மேம்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது.

இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, சென்னை சென்ட்ரல் – திருவொற்றியூர் – எண்ணூர் – பொன்னேரி – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை – நெல்லூர் இணைப்பு (176 கி.மீ.), சென்னை கடற்கரை – எழும்பூர் – மாம்பலம் – திரிசூலம் – தாம்பரம் – திருமால்பூர் – தக்கோலம் – அரக்கோணம் இணைப்பு. (122.71 கி.மீ.), சென்னை கடற்கரை – எழும்பூர் – மாம்பலம் – திரிசூலம் – தாம்பரம் – செங்கல்பட்டு – மேல்மருவத்தூர் – திண்டிவனம் – விழுப்புரம் இணைப்பு (163 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – திருத்தணி – ரேணிகுண்டா – திருப்பதி இணைப்பு. (151 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – காட்பாடி – வேலூர் கன்டோன்மன்ட் – ஆரணி – திருவண்ணாமலை – திருக்கோவிலூர் – விழுப்புரம் இணைப்பு (290 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – காட்பாடி – ஜோலார்பேட்டை இணைப்பு (213 கி.மீ.) என மொத்தம் 896 கி.மீ தொலைவுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சேவையை தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், மருத்துவமனை, வியாபாரம் என பலதரப்பட்ட மக்கள் இந்த ரயில் சேவைைய பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நடைமேடையில் மின் தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகள், நடைமேடையில் சிசிடிவி கேமரா, மின்விசிறி, கூடுதல் இருக்கைகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளது. இந்நிலையில், பயணிகள் கோரிக்கையை ஏற்று சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு: நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், உலக தரத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அம்பத்தூர், அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், பூங்கா நிலையம், பெரம்பூர், பரங்கிமலை, சூலூர்பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்த நிலையங்களை மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தற்போது, ஒப்பந்தப்பணி இறுதி கட்டத்தில் உள்ளது.

ஒவ்வொரு நிலையம் மறுசீரமைப்பு செய்ய ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 15 நிலையங்களில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். இதற்காக, ரயில் நிலையங்களின் வரைவு மாதிரி தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், நிலையத்தின் முகப்புமற்றும் நுழைவு பகுதியில் கட்டிட வடிவமைப்பு பிரமாண்டமாக இருக்கும்.

இதுதவிர, ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலையங்கள் சீரமைப்புபணிக்கு தலா ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் 2023-24-ம்நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தின் முதல்கட்டத்தில் கழிப்பறைகள், ரயில் நிலைய முகப்பு, நுழைவாயில், மின்தூக்கிகள், நகரும்படிக்கட்டுகள், தரமான நாற்காலிகள், அகலமான நடைமேம்பாலங்கள் உட்பட பல வசதிகள் மேம்படுத்தப்படும். அடுத்தகட்டமாக, 15 நிலையங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சிசிடிவி கேமரா
தெற்கு ரயில்வே சார்பில் நிர்பயா திட்டத்தின் கீழ், சென்னை கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் ரூ.9 கோடியே 79 லட்சம் செலவில் 528 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, பசுமைவழிச்சாலை, கோட்டூர்புரம், இந்திரா நகர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, சென்னை பூங்கா, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

* குற்றங்கள் தடுப்பு
ரயில் பெட்டிகளில் உள்பகுதியில் மட்டுமல்லாமல், பெட்டியின் நுழைவாயிலில், அதாவது இரு பக்கமும் கதவுபகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ரயிலில் ஏறுபவர்கள், இறங்குபவர்களையும் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்புகளை தீவிரப்படுத்த முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை கோட்டத்தில் தலா ரூ.11 கோடியில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: