மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மிகப் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பராமரிப்பில்லாததால் பாழடைந்து காணப்படுகிறது. மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டலம் கிராமம், அக்ரகார தெருவில் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கோயில் கிராமத்தில் உள்ளதால், ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு சுற்றுச்சுவர் மற்றும் போதிய பாதுகாப்பு இன்றி காணப்படுகிறது. இக்கோயிலில் நீண்டகாலமாக முறையான பராமரிப்பின்றி, கோயிலின் மேற்பகுதி தளத்தில் அரசமரம் முளைத்து, கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது.
இக்கோயிலில், முறையான பாதுகாப்பு வசதி இல்லாததால், இங்கு எந்நேரமும் ஒருசிலர் மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர், காலி மதுபாட்டில்களை ராட்டினக்கிணற்றில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், கிணற்று நீரில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, பழமையான லட்சுமி நாராயண பெருமாளை கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post மாமல்லபுரம் அருகே பாழடைந்த லட்சுமி நாராயண பெருமாள் கோயில்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.