விசைத்தறி கூடங்கள் வழக்கம் போல் இயங்கும்

 

பள்ளிபாளையம், மே 22: தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து விசைத்தறிகள் வழக்கம் போல இயங்குமென தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கடந்த ஒப்பந்தம் காலாவதியாகி 26 மாதங்களாகியும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கையை விளக்கி போராட்டங்களில் இறங்கினர். இதையடுத்து ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் 2 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் ஒப்பந்தம் ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் இன்று (22ம்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுமென தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6வது சுற்று பேச்சுவார்த்தை துவங்கியது. இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் ஜப்பான் சண்முகம், திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், அங்கமுத்து, மோகன், வெங்டேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தொடர்ந்து தொழிற்சங்க கோரிக்கைகளும், ஜவுளி உற்பத்தியாளர்களின் தொழில் நெருக்கடி குறித்தும் இருதரப்பினரும் தங்கள் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டனர். ஆனால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இதையடுத்து அரசு தரப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் பங்கேற்று இருதரப்பினரையும் சமரசப்படுத்தினார்.இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. வரும் ஜுன் 1ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வும், அடுத்த ஆண்டு முதல் மேலும் 3 சதவீதமும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்று கையெழுத்திட்டனர்.இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற்சங்கத்தினர் திரும்ப பெற்றனர். தொடர்ந்து விசைத்தறி கூடங்கள் இயங்குமென அறிவிக்கப்பட்டது.

The post விசைத்தறி கூடங்கள் வழக்கம் போல் இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: