(வேலூர்) விரக்தியில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தற்கொலை விரிஞ்சிபுரம் அருகே பரபரப்பு காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம்

பள்ளிகொண்டா, மே 20: தான் காதலித்த பெண் வேறு ஒருவரை கரம் பிடித்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் அதனை தாங்க முடியாத மன வேதனையில் இருந்த வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிகொண்டா அடுத்த அன்னாசிபாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். பெயிண்டர். இவரது மகன் விக்னேஷ்(21) தந்தையுடன் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். விக்னேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண்ணிற்கு பெற்றோர்கள் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த பெண்ணும் வேறொருவரை கரம் பிடித்த நிலையில் 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

ஆனால், விக்னேஷ் காதலித்த பெண்ணை மறக்க முடியாத விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள விரிஞ்சிபுரம் அடுத்த குடிசை கிராம சுடுகாட்டில் அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். அதனை தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் ஏற்கனவே தயார் நிலையில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தன் உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தனக்குதானே தீ வைத்து எரித்து கொண்டுள்ளார்.

இதில், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த விக்னேஷ் சுடுகாட்டு பகுதியில் இருந்து சாலை பகுதிக்கு உடல் எரிந்த நிலையில் ஓடி வந்துள்ளார். இரவு 10 மணியளவில் சுடுகாட்டில் இருந்து எரிந்த நிலையில் ஓடி வந்த நபரை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். அப்போது கத்தி கூச்சலிட்ட விக்னேஷின் சத்தம் கேட்ட சிலர் அவரை மீட்டுள்ளனர். உடல் முழுவதும் தீக்காயமடைந்த விக்னேஷை மீட்ட பொதுமக்களிடம் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்னை காப்பாற்றாதீர்கள் என கூறி கையில் வைத்திருந்த பைக் சாவி மற்றும் எரிந்த நிலையில் இருந்த செல்போனை அவர்களிடத்தில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் விக்னேஷை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிசிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து விக்னேஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் காதலித்த பெண்ணிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் ஆன நிலையிலும், அவரை மறக்க முடியாத சோகத்தில் இருந்து மீளமுடியாத வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post (வேலூர்) விரக்தியில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தற்கொலை விரிஞ்சிபுரம் அருகே பரபரப்பு காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: