2023-05-20வேலூர், மே 20: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய வேலூர் சிறைவாசிகள் 29 பேரில் 27 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு சிறைத்துறையில் சிறைவாசிகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து உதவிகளையும் சிறைத்துறை செய்து வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் பள்ளிக்கல்வி தொடங்கி ஆராய்ச்சி கல்வி வரை படித்து வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மத்திய ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் சிறையிலும் பலரும் கல்வி கற்று வருகின்றனர். இதில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 27 பேர் எழுதினர். இதில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் முதல் மதிப்பெண்ணாக 500க்கு 401 மதிப்பெண் பெற்று மணிமாறன் என்பவர் அசத்தி உள்ளார். அதேபோல் பெண்கள் தனிச்சிறையில் 2 பேர் தேர்வு எழுதி இருவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண்ணாக ராதா என்பவர் 500க்கு 414 மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளார். தேர்ச்சி பெற்றவர்களை சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் ஆகியோர் பாராட்டினர்.
The post வேலூர் சிறைவாசிகள் 27 பேர் தேர்ச்சி 10ம் வகுப்பு தேர்வில் appeared first on Dinakaran.