கொடிக்கம்பத்தை அகற்ற வந்த அதிகாரிகள் முற்றுகை

 

நாமகிரிப்பேட்டை, மே 20: நாமகிரிபேட்டையில், உரிய அனுமதியின்றி வைத்த அதிமுக கொடிக்கம்பத்தை அகற்ற வந்த அதிகாரிகளை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமகிரிப்பேட்டையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா மற்றும் 200 பேர் கட்சியில் இணையும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, நாமகிரிப்பேட்டை பஸ் நிலைய பகுதியில் 50 அடி கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக, உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், ஏ.இ., மணிகண்டன், ஆர்.ஐ., கோமதி, வி.ஏ.ஓ., கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று அப்பகுதிக்கு விரைந்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் கொடிக்கம்பத்தை அகற்ற முயன்றனர். தகவலறிந்த அ.தி.மு.கவினர், ஒன்றிய செயலாளர் சரவணன், பேரூர் செயலாளர் மணிக்கண்ணன் தலைமையில் அங்கு திரண்டனர். தொடர்ந்து கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தாசில்தார் சுரேஷ் விரைந்து சென்று, அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிகழ்ச்சி முடியும் வரை கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டாம் என அதிமுகவினர் கேட்டுக்கெண்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கொடிக்கம்பத்தை அகற்ற வந்த அதிகாரிகள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: