சூறைக்காற்றுக்கு 2,000 வாழைமரங்கள் நாசம்

 

நாமகிரிப்பேட்டை, மே 20: நாமகிரிப்பேட்டை அருகே சூறாவளி காற்றுக்கு 2 ஆயிரம் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரப்பன்சோலை, மெட்டாலா, பெரியகொம்பை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், நாமகிரிப்பேட்டை மற்றும் முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பெரப்பன்சோலை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கோடை மழை பெய்தது. அப்போது, பலத்த காற்று வீசியது.

சூறைகாற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பெரப்பன்சோலை சூரியன்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் தோட்டத்தில், சுமார் 3 ஏக்கரில் 2,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானது. அனைத்தும் செவ்வாழை ரகங்களாகும். முறிந்து விழுந்து நாசமான வாழைகளின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி சந்திரன் கூறுகையில், ‘இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். செவ்வாழை பழங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், 2300 வாழை கன்றுகளை சுமார் ரூ.4 லட்சத்திற்கு ராயக்கோட்டையில் இருந்து வாங்கி வந்து சாகுபடி செய்தோம்.

சாகுபடிக்கு ரூ.5 லட்சம் வரை செலவானது. 10 மாதங்களாக பராமரித்து வந்த நிலையில், குலை தள்ளி நன்கு காய் பிடித்து அறுவடைக்கு தயாராக இருந்தது. மார்க்கெட் நிலவரப்படி ஒரு வாழைத்தார் ரூ.600 முதல் ரூ.700 வரை விலை போகிறது. இந்நிலையில், பலத்த காற்றுக்கு 2000 வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post சூறைக்காற்றுக்கு 2,000 வாழைமரங்கள் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: