குற்றவாளியை விரைவில் பிடிக்க போலீசார் தீவிரம்

 

பள்ளிபாளையம், மே 20: மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்யும் பாலியல் குற்றவாளி குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. குற்றவாளியின் நடவடிக்கையை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சேர்ந்த பாவாயம்மாள்(65) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கரும்பு தோட்டத்தில் நிர்வாண நிலையில் கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் துப்பு துலக்கி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பில்லுமடைகாடு பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள்(64) என்பவர், தான் வசித்து வந்த கொட்டகையில் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தொடர்ந்து மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து இயங்கும் கொலையாளி மனநோயாளியாக இருக்கலாமென சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில், இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவன் மீது, போலீசார் பார்வை திரும்பியுள்ளது. அந்த நபரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, சைக்கோ போன்று இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம நபரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் குற்றவாளி பிடிபடுவான் என தெரியவந்துள்ளது.

The post குற்றவாளியை விரைவில் பிடிக்க போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: