பங்கு விலை முறைகேடு குற்றச்சாட்டில் அதானி எந்த தவறும் செய்யவில்லை: உச்ச நீதிமன்ற குழு பரபரப்பு அறிக்கை

புதுடெல்லி: அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இதுதொடர்பாக செபி நடத்திய விசாரணையில் ஆதாரத்தை கண்டறிய தவறி விட்டதாகவும் உச்ச நீதிமன்ற குழு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்துள்ளதாகவும், பங்குகளின் விலையை அதிகரிக்க பல மோசடிகளை செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை கடுமையாக வீழ்ந்தது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது. இந்த குழு தற்போது 173 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: பங்குச்சந்தை ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளரான, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தரவுகளின் அடிப்படையில், அதானி குழுமத்தின் எந்த ஒரு நிறுவனமும், பங்கு விலை அதிகரிப்பு முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பங்குகள் விலை திடீரென அதிகரித்ததை மட்டும் வைத்துக் கொண்டு முறைகேடுகள் நடந்ததா என்ற முடிவுக்கு வருவது சாத்தியமில்லை.

கடந்த 2020ம் ஆண்டு அதானி குழுமத்தில் 13 வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபிக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்துள்ளன. இதுதொடர்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி உள்ளது. ஆனால் இதில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படவில்லை. அதே சமயம், அதானி குழுமம் இந்திய ஒழுங்குமுறை சட்டங்களுக்கு இணங்குவதாகவும் செபி தெரிவித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பிரதானமானதாக இல்லாவிட்டாலும், கடுமையான குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ள அதானி குழுமத்திற்கு நிவாரணம் தந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற குழுவின் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 1.2 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை அதிகரித்தன. அதானி விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வரும் ராகுல் காந்தியை பாஜ கடுமையாக தாக்கி உள்ளது. அதே நேரத்தில் இது யூகித்த முடிவு தான் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The post பங்கு விலை முறைகேடு குற்றச்சாட்டில் அதானி எந்த தவறும் செய்யவில்லை: உச்ச நீதிமன்ற குழு பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: