அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளில் ₹203.92 கோடியில் புதிய குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், மே 19: வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ₹203.92 கோடியில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நகரங்களில் நகர்ப்புறங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அம்ருத் திட்டம் மூலம் மின்னாளுகை, நிதிச் சீர்திருத்தம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த திட்டம் வரையறுக்கப்பட்டது. இதன்படி இந்த நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தண்ணீர், கால்வாய் வசதிகள், கழிவு மேலாண்மை, சாலை வசதிகள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் நகர்புறங்களில் தற்போதைய வளர்ச்சி சூழலில் பேரூராட்சிகள் முக்கியத்துவம் கொண்டவைகளாக உள்ளன.

இந்த பேரூராட்சிகளிலும் தரமான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இங்கு உள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டப்பணிகளை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டரும், பாதாள சாக்கடை திட்டமுள்ள பேரூராட்சிகளில் 135 லிட்டரும் குடிநீர் வழங்க தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் ₹203.92 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது: அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் பேரூராட்சிக்கு ₹29.25 கோடியும், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு ₹37.30 கோடியும், திருவலம் பேரூராட்சிக்கு ₹15.50 கேடியும் என மொத்தம் ₹82.05 ேகாடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு ₹2.77 கோடியும், புதுப்பாளையம் பேரூராட்சிக்கு ₹10.88 கோடியும், வேட்டவலம் ₹13.89 கோடியும் என மொத்தம் ₹27.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மூர் பேரூராட்சிக்கு ₹30.23 கோடியும், காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு ₹16 கோடியும், நெமிலி பேரூராட்சிக்கு ₹7 கோடியும், திமிரி பேரூராட்சிக்கு ₹20.42 கோடியும், விளப்பாக்கம் பேரூராட்சிக்கு ₹20.30 கோடியும் என மொத்தம் 94.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மொத்தம் 203.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சிகளில் டெண்டர் விடப்பட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறித்த காலக்கெடுக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பட்டுள்ள பேரூராட்சிகளில் அடுத்தக்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

The post அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளில் ₹203.92 கோடியில் புதிய குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: