சிறு வயதில் நாம் அதிகம் கேள்விப்பட்ட வார்த்தை இது. கட்டுச்சோறு என்றால் அது புளிச்சோறுதான். தயிர்ச்சோறு, எலுமிச்சைச் சோறும் கூட கட்டுச்சோறுதான். ஆனால் அவற்றை அதிகமாக யாரும் செய்வது கிடையாது. புளிச்சோறுதான் அனைவருக்கும் பேவரைட். குறிப்பாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு புளிச்சோறுதான் பெஸ்ட் சாய்ஸ். காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், வெந்தயம் உள்ளிட்ட எளிமையான பொருட்களுடன் புளிக்கரைசலை சேர்த்து பாகுபோல பக்குவமாக காய்ச்சி அதில் சோற்றைக் கலந்து பாக்கெட்டாகவோ, பாத்திரத்திலோ கட்டி எடுத்துச் செல்வார்கள். பயணத்திற்கான உணவு என்றால் இதுதான்.
வீட்டில் 2 நாள் இருப்பு வைத்து சாப்பிடவும் இதை பலர் செய்வதுண்டு. இந்த ரக புளிச்சோறு இப்போது ஓட்டல்களில் கூட அபூர்வமாகிவிட்டது. புளிச்சோறு சாப்பிட வேண்டும் என்றால் இப்போது கோயில்களுக்கு சென்றால்தான் உண்டு என்ற நிலையே உருவாகிவிட்டது. கோயிலில் தயாரிக்கப்படும் புளியோதரை என்ற புளிச்சோற்றுக்கு தனி ருசியே உண்டு. சிறிய அளவிலான தொன்னையில் அடைத்துத் தரப்படும் புளியோதரையை சாப்பிட்டு சப்பு கொட்டும் போது, வீட்டில் இதை செய்து பார்க்கலாமே என்று சிலருக்கு எண்ணத்தோன்றும். ஆனால் அந்த சுவையான புளியோதரையை செய்வதற்கான பக்குவம் நமக்கு தெரியாது. கவலை வேண்டாம். இதைப் பார்த்து கோயில் ஸ்டைல் புளியோதரை செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள்
அரைக்க
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
மல்லி – 2 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – காரத்திற்கேற்ப.
வறுக்க
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
வேர்க்கடலை – 3 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 50 கிராம்.
சமையலுக்கு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 2 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 5-8
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளிக்கரைசல் – தேவையான அளவு (திக்காக)
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 2 ஸ்பூன்
அரிசி சாதம் – 2 கிலோ.
செய்முறை:
கோயில் ஸ்டைல் புளியோதரை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவையானது புளியோதரைப் பொடி. எனவே அதை எப்படி தயார் செய்வது என்பதை முதலில் பார்ப்போம்.
புளியோதரை பொடிக்கு முதலில் சிறிய பாத்திரம் அல்லது தவா எடுத்துக் கொள்ளவும். அவை சூடானதும் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை இட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அவற்றோடு மிளகு, மல்லி, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் வறுக்கவும். தொடர்ந்து அவற்றோடு காய்ந்த மிளகாய் சேர்த்தும் வறுக்கவும்.
இவை அனைத்தையும் வறுக்கும்போது மிதமான சூடு தொடர்வதை கவனத்தில் கொள்ளவும். இவை நன்கு ஆறிய பிறகு மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதன் பின்னர் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் சமையல் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றோடு வேர்க்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றோடு, முன்பு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பிறகு அவற்றை ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
இந்த கலவை நன்கு கொதித்த பின்னர், அவற்றோடு முன்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ளவும். மசாலா கலவை கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும். அவை நன்கு கொதித்து கீழே இறக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இவற்றோடு இனிப்புச்சுவைக்கு சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும். இப்போது முன்பு வடித்து வைத்துள்ள சாதத்துடன் தனியாக வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையை முதலில் சேர்க்கவும். பிறகு கொதிக்க வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். நாம் மிக்ஸ் செய்யும் சாதம் குழையாமல் இருப்பது அவசியமாகும். கலவையை நன்றாக மிக்ஸ் செய்த பின்னர் பார்த்தால் கோயில் புளியோதரை தயாராக இருக்கும்.
The post கோயில் ஸ்டைல் புளியோதரை appeared first on Dinakaran.