கிருதுமால் நதியில் உதித்த ஜெயவீர ஆஞ்சநேயர்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிருந்து அரை கிமீ தொலைவில் வடக்கு மாசி வீதியில் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார். சுமார் இரண்டரை அடி உயரத்தில் இடது கையில் சஞ்சீவி மலையை ஏந்தியவாறும், வலது கையை இடுப்பில் வைத்தவாறும் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இங்கு விநாயகர், மஹாலட்சுமி, நரசிம்மர், கருடாழ்வார் சிலைகள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் உள்ளது.

தல வரலாறு
பண்டைய காலத்தில் மதுரையில் குழந்தையானந்தா என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். இவர் மீனாட்சியம்மனின் குழந்தையாக மக்களால் மதித்து வணங்கப்பட்டார். கிருதுமால் நதிக்கரையில் வசித்த வந்த அவர், தினமும் வைகையாற்றில் அதிகாலையில் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு நாள் இரவு மதுரை நகர் மக்கள் அனைவரின் கனவுகளில் தோன்றிய ஆஞ்சநேயர், கிருதுமால் நதி நீரில் மூழ்கி கிடக்கும் தனது சிலையை மீட்டு வைகை நதிக்கரையோரத்தில் பிரதிஷ்டை செய்யும்படி கூறி மறைந்தார். மறுநாள் நகரில் காட்டுத்தீ போல் இந்த செய்தி பரவியது.

குழந்தையானந்தா சுவாமியை அணுகிய மக்கள், ஆஞ்சநேயரின் சிலையை கண்டெடுத்து தரும்படி வேண்டினர். மக்களுக்கு சிலை இருக்கும் இடம் குறித்து ெதரியாததால், அவர்களை தன்னுடன் குழந்தையானந்தா அழைத்து சென்றார். இதனையடுத்து குழந்தையானந்தா தலைமையில் கிருதுமால் நதியில் சிலையை தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர் முதலாவதாக நரசிம்மரின் சிலை கிடைத்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர், விநாயகா, மகாலட்சுமி, கருடாழ்வார் சிலைகளும் கிடைத்தன. பின்னர் ஆஞ்சநேயரின் விருப்பப்படி தற்போது சிம்மக்கல் என அழைக்கப்படும் பகுதியில் பட்டுப்போன நிலையில் இருந்த இலுப்பை மரத்தின் கீழ் அந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பின்னர் அந்த மரத்தின் இலைகள் துளிர் விட்டு வளர ஆரம்பித்தது என்பது கோயிலின் வரலாறு. பின்னர் பாண்டிய மன்னர்கள் மற்றும் மன்னர் திருமலை நாயக்கரால் இக்கோயில் எடுத்து கட்டப்பட்டுள்ளது. தற்போது முன்பக்க பிரகாரத்துடன் கோயில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னதியின் முன்புற சுவற்றில் ராமர், சீதாவுடன் அரச சபையில் வீற்றிருக்கும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமநவமி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். வேலை கிடைக்க வேண்டி இங்கு வந்து வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

வேலை கிடைத்தவுடன் பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை செய்கின்றனர். இங்குள்ள சிலைகள் மகரிஷி குழந்தையானந்தாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், ஆகம விதிப்படி பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மற்றும் குங்குமம் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. இவற்றில் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் ‘விருத’அலங்காரம் மிகவும் சிறப்பானதாகும். ஆஞ்சநேயர் கோயிலில் விநாயகருக்கும், கருடாழ்வாருக்கும் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது அரிதானதாகும்.

The post கிருதுமால் நதியில் உதித்த ஜெயவீர ஆஞ்சநேயர் appeared first on Dinakaran.

Related Stories: