ஏரியில் மூழ்கி கணவர் இறந்த வேதனையில் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை ஆதரவின்றி 2 பிள்ளைகள் கதறல் காட்பாடியில் அடுத்தடுத்து சோகம்

வேலூர், மே 18: காட்பாடி ஏரியில் மூழ்கி கணவன் இறந்த சோகத்தில் கிண்ணற்றில் குதித்து மனைவியும் தற்கொலை செய்து கொண்டதால், 2 பிள்ளைகள் ஆதரவின்றி கதறிய சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி பிள்ளையார் கோயில் தெரு ஏரிமுனை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(34), கூலித்தொழிலாளி. இவரது மனைவி இளவரசி(30). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் கடந்த 14ம் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்துள்ளார். ரஞ்சித்குமார் அழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் ஏரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ரஞ்சித்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் மறுநாள் 15ம் தேதி தீயணைப்புத்துைறயினர் தேடுதலில் ஈடுபட்டனர். அன்றிரவு 10 மணியளவில் ரஞ்சித்குமார் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து ரஞ்சித்குமாரின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவனின் உடலுடன் வீட்டுக்கு வந்த இளவரசி, மனம் வேதனையான நிலையில் யாரிடமும் பேசாமல் கண்ணீருடன் இறுதி சடங்குகளை முடித்தார். தொடர்ந்து குடும்பத்தின் ஒரே ஆதாரமான தனது கணவன் பலியான நிலையில் தனது இரண்டு மகன்களை எப்படி கரைசேர்ப்பது? என்ற வேதனையில் இருந்த அவர் திடீரென நள்ளிரவில் மாயமானார். இது அறியாமல் நேற்று அதிகாலை எழுந்த அவரது மகன்கள் தாயை காணாமல் பல இடங்களில் தேடினர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களும் இளவரசியை தேடினர். அப்போது இளவரசி வீட்டின் பின்புறம் 50 அடி தொலைவில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பதை பார்த்து தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால், ஆதரவின்றி தவிக்கவிடப்பட்ட இளவரசியின் 2 மகன்கள் வேதனையில் கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்குள்ளவர்களின் மனதை பதற செய்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இளவரசியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏரியில் மூழ்கி கணவர் இறந்த வேதனையில் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை ஆதரவின்றி 2 பிள்ளைகள் கதறல் காட்பாடியில் அடுத்தடுத்து சோகம் appeared first on Dinakaran.

Related Stories: