(தி.மலை) பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார் மஞ்சப்பை பயன்பாடு வலியுறுத்தி

திருவண்ணாமலை, மே 18: பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வுக்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து `ஒற்றை பயன்பாடு நெகிழி தவிர்ப்பு’ குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அண்ணா நுழைவு வாயில் அருகே இருந்து நடந்த போட்டியை கலெக்டர் பா.முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒருமுறை மட்டும் பயன்பாடு உள்ள பிளாஸ்டிக் (நெகிழி) தூக்கு பைகள், நீர், காபி, டீ குடிக்க பயன்படுத்தும் டம்ளர், ஒட்டல்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள், வாழை இலைக்கு பதிலாக பயன்படுத்தும் நெகிழி தாள்கள், கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க பயன்படும் நெகிழி உறிஞ்சு குழல்கள், பாணி பூரி கடைகளில் பயன்பாடு உள்ள தெர்மோகோல் தட்டுகள், நெகிழி கொடிகள், மேசை விரிப்புகள், பூக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் பயன்பாடு உள்ள பிளாஸ்டிக் பைகள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த முதல்வர் பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரை 4 கிலோ மீட்டர் தூரம் இந்த போட்டி நடத்தப்பட்டது.

மேலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் மாரத்தான் போட்டி அண்ணா நுழைவு வாயில் தொடங்கி குபேர லிங்கம், வாயு லிங்கம், அடி அண்ணாமலை வழியாக சாந்தி மலை டிரஸ்ட் வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ₹7 ஆயிரம், 2ம் பரிசு ₹4,500 மற்றும் மூன்றாம் பரிசு ₹2,500 என ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் மொத்தம் 12 பரிசுகளும், 4 முதல் 10ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ₹500 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பா.காமராஜ், உதவிப் பொறியாளர் வா.கதிர்வேலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.பாலமுருகன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை) பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார் மஞ்சப்பை பயன்பாடு வலியுறுத்தி appeared first on Dinakaran.

Related Stories: