ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி சேத்துப்பட்டு அருகே பயங்கரம் கார்- அரசு பஸ் நேருக்குநேர் மோதல்

சேத்துப்பட்டு, மே 17: சேத்துப்பட்டு அருகே கார்- அரசு பஸ் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலழகன்(39), தனியார் பஸ் கண்டக்டர். இவர் தனது கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்காக பட்டாசு வாங்க நேற்று மாலை காரில் தனது நண்பர்களுடன் சேத்துப்பட்டு நகருக்கு வந்தார். பின்னர், பட்டாசு வாங்கியதும் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி சென்றனர். சேத்துப்பட்டு- போளூர் சாலையில் கிழக்குமேடு கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து, போளூரில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்த அரசு பஸ் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கியது.

இதில், காரை ஓட்டி வந்த வடிவேலழகன், அவருடன் வந்த நண்பர்கள் வசூர் கிராமத்தை சேர்ந்த ஷங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் வந்த பிரகாஷ்(37) என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும், காரை பின் தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த சேத்துப்பட்டு அடுத்த இடையங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி சந்தியா(27) என்பவர், விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து ஸ்கூட்டரை சாலையிலேயே விட்டுவிட்டு விலகி சென்றார். தொடர்ந்து, எதிரே வந்த பஸ்சின் அடியில் சிக்கி ஸ்கூட்டர் அப்பளம் போல் ஆனது. சந்தியா சுதாரித்து கொண்டு விலகி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், முருகன், குணசேகரன், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன், கார் இடிபாடுகளில் சிக்கியவர்களின் 4 பேரின் சடலங்களை போராடி மீட்டனர். மேலும், படுகாயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்த பிரகாஷை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும், போலீசார் பலியான 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தகவலறிந்த திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பி (பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்- பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி சேத்துப்பட்டு அருகே பயங்கரம் கார்- அரசு பஸ் நேருக்குநேர் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: