சென்னை: மெரினாவிலிருந்து 10 நிமிடங்களில் கிண்டியை அடையும் வகையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதில் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய பகுதிகளான அடையாறு, சாந்தோம் பிரதான சாலை, காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து கிண்டி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ரூ.45 லட்சம் மதிப்பில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்நிலையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டால், சென்னையில் போக்குவரத்து மேம்படும் என கூறப்படுகிறது. சென்னையில் தொழில், வணிகம், சுற்றுலா ரீதியாக இணைக்க சாலைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
இந்நிலையில் மெரினா முதல் கிண்டி வரை உள்ள சாலையில் அதிகரித்துள்ள குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலா மையங்கள், வணிக மையங்கள், விமான நிலையம், மெட்ரோ நிலையங்கள், மருத்துவமனைகள் காரணமாக இந்த இடைப்பட்ட சாலையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னை சாந்தோம் முதல் கிண்டி செல்வதற்கு 9 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு தற்போது ஒரு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் 2 மணி நேரம் ஆகிறது. காலை மற்றும் மாலை வேளையில் அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சாந்தோம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை வழியாக கிண்டி சென்றாலும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கும், அதேபோல், சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு, மத்திய கைலாஷ், சைதாப்பேட்டை வழியாக கிண்டி சென்றாலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். மேலும் மத்திய கைலாஷ் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சின்னமலை சந்திப்பு, கிரீன்வேஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றால் காலை மற்றும் மாலை நேரங்களில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் மெரினா கலங்கரை விளக்கம் முதல் மணப்பாக்கம் பாலம் சந்திப்பு ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்படும். கலங்கரை விளக்கத்திலிருந்து கச்சேரி ரோடு, சாந்தோம் சந்திப்பு, பட்டினப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, திருவிக பாலம், கோட்டூர்புரம் ரயில் நிலையம், கோட்டூர்புரம் பாலம், மறைமலை அடிகளார் பாலம், காசி திரையரங்கு பாலம், மணப்பாறை மியாட் மருத்துவமனை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14.3 கி.மீ நீளத்துக்கு இந்த மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போக்குவரத்து ஆய்வுகளின்படி இரண்டு முக்கிய இடங்களையும் இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலப்பரப்பு மண் ஆய்வு போக்குவரத்து பகுப்பாய்வு உள்ளடக்கிய பணிகளை முடிக்க 6 மாதங்கள் வரை ஆகும்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கலங்கரைவிளக்கம் முதல் கிண்டி வரையிலான 14.3 கி.மீ. உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.45 லட்சம் மதிப்பில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் கடந்த 3ம் தேதி வாக்ஸ் கன்சல்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பாலமானது அடையாறு திருவிக பாலம், கோட்டூர்புரம் பாலம், மறைமலை அடிகளார் பாலம், காசி திரையரங்கத்திற்கு அருகில் உள்ள பாலம் ஆகிய பாலங்களை இணைத்து இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. மேலும் கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கிறது. தற்போது உள்ள சாலையை விரிவாக்கம் செய்வது என்பது சாத்தியமற்றதாகும். ஏனென்றால் விரிவாக்கத்திற்கு செலவழிக்கும் தொகையை விட நிலம் கையகப்படுத்த ஆகும் செலவு அதிகம். எனவே மதுரவாயல் முதல் துறைமுகம் வரை எவ்வாறு மேம்பாலம் அமைக்கப்படுகிறதோ அதோபோன்று அடையாறின் முகத்துவாரம் முதல் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை வரை ஆற்றிற்கு நடுவே பில்லர் அமைத்து உயர்மட்ட பாலம் அமைய உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட உடன் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் தொடங்கப்படும். சென்னையில் மிகவும் நீளமான மேம்பாலமாக இது இருக்கும். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
The post சென்னையில் மிக நீளமாக அமைகிறது மெரினாவில் இருந்து 10 நிமிடங்களில் கிண்டி செல்ல புதிய மேம்பாலம்: திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம் appeared first on Dinakaran.
