முல்லைப்பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவை நியமித்தனர். இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் விஜயசரண் உள்ளார். இவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கொச்சியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார்.

தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 118 அடியாக உள்ளது. இதனால், அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்கமான பணிகளையும், அணைப்பகுதியில் செய்ய வேண்டிய பணிகளையும் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று காலை ஆய்வு செய்தனர்.

முன்னதாக மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகு இயக்கம், அணையின் கசிவுநீர் (சீப்பேஜ் வாட்டர்) குறித்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள உயர்நிலை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில், இன்று மாலை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

The post முல்லைப்பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: