அகரம் கிராமத்தில் மண்பானைகள் செய்யும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை, மே 13: அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக தற்போதுதான் ஆர்டர்கள் வந்துள்ளதால், மண்பானைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி 28ம் தேதி முடிகிறது. தற்போது அக்னிநட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் மக்கள் இளநீர், மோர், பழ ஜூஸ்கள், கூழ், குளிர்பானங்களை நாடுகின்றனர். வசதி படைத்தவர்கள் வீடுகளில் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் வைத்து அதை குடித்து வருகிறார்கள். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு என்றுமே ‘மண்பானை’ தான் குளிர்சாதனப்பெட்டி. இதில் தண்ணீர் பருகினால் எந்தவிதநோயும் தாக்காது. இதனால் ‘மண் பானை’ தண்ணீரையே மக்கள் பெரிதும் பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில் பெரியபாளையம் அருகே அகரம், ஆரணி, தண்டலம் மற்றும் ஊத்துக்கோட்டை கலைஞர் தெரு, பஸ்நிலையம் எதிரிலும் ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம், பாலவாக்கம் போன்ற பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோடைவெயிலுக்காக ‘மண்பானைகள்’ செய்யும் பனியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: எங்களுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பானைகள் செய்வதற்காக ஆர்டர்கள் கிடைக்கும். ஆனால் இந்தமுறை தற்போதுதான் ஆர்டர் வருகிறது. இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பானைகளை மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கிச்செல்வார்கள். ஒரு பானை ₹50 முதல் ₹200 வரை விலை போகிறது. தமிழ்நாடு அரசு பானை செய்யும் இயந்திரம் வழங்கவேண்டும். மேலும் அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கவேண்டும் என்றனர்.

The post அகரம் கிராமத்தில் மண்பானைகள் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: