மாஜி இலை அமைச்சரை சேலம் அணிக்கு இழுக்க நடக்கும் பேரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, மாஜி அமைச்சரான வைத்தியை தங்கள் பக்கம் தூக்கிவர இருக்காங்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் சேலத்துக்காரர் அணி கை ஓங்கியிருப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தேனிக்காரர், குக்கர், சின்னமம்மி தரப்பை கூண்டோடு காலி செய்ய முடிவு செய்து இருக்கிறாராம். அதற்காக, இந்த மூன்று பேரின் ஆதரவாளர்களை தங்கள் அணி பக்கம் இழுக்க சேலத்துக்காரர் செய்து, அதற்கான நபர்களை நியமித்துள்ளாராம். இதில் முக்கியமாக மத்திய மண்டலமான டெல்டா மாவட்டத்தை சேலத்துக்காரர் குறி வைத்துள்ளார். இந்த வேலையை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தி முடிப்பதற்காக ‘மாஸ்டர் பிளான்’ போட்டு தன் அணியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களிடம் ‘லிஸ்ட்’ கொடுத்துள்ளார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு தலைநகரில் குக்கர் கட்சி தலைவரை, தேனிக்காரர் நேரில் சந்தித்து பேசினாராம். அப்போது பல திட்டங்களை குக்கர்காரரும் தேனிகாரரும் பறிமாறிக் கொண்டார்களாம். தேனிக்காரர் அடுத்ததாக, சின்னமம்மியை சந்திக்க போவதாக சொன்னாராம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2வது பிளான் அங்கே தான் முடிவு செய்யப்படுமாம். இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரர், சின்னமம்மியை தேனிக்காரர் சந்திப்பதற்கு முன்பு அவரது அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளில் சிலரை, தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். இதில் நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் வைத்தியானவரை இழுப்பதற்கான முயற்சி தீவிரமாக நடக்கிறதாம். இதுதொடர்பாக அவரிடம் ‘வைட்டமின் ப’ மற்றும் கட்சியில் என்ன பதவி வேண்டும் என்ற அளவுக்கு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் வந்துள்ளதாக பேசிக்கிறாங்க. ஆனால், வைத்தி அவ்வளவு சீக்கிரத்தில் பிடி கொடுக்காமல்… பார்க்கலாம் என்று நாட்களை கடத்தி கொண்டே இருக்கிறாராம். அரசியல் போகும் பாதையை கணித்து அணி மாற முடிவு செய்துள்ளதாக நெற்களஞ்சிய இலை கட்சியினர் மத்தியில் பேச்சு பலமாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ பட்டாசு வெடிக்கல.. இனிப்பு கொடுக்கல என்று இலை கட்சியினர் எதை பற்றி பேசிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனிக்காரர் மாநாடு நடத்தினாலும், கட்சி சேலம்காரர் கையில் போயிடுச்சு. இதனால, தென் மாவட்டங்களில் தொண்டர்களிடம் எந்த ரியாக்சனும் இல்லையாம். இதனால் பொறுத்துப் பார்த்த தேனிக்காரர் வேறு வழியில்லாது குக்கர்காரரை சந்தித்து மனம்விட்டு பேசினாராம். இதை தேனிக்காரர் தரப்பு ரசிக்கவில்லையாம். வழக்கமாக அரசியலில் திருப்புமுனை என்றால் அல்வா, முத்து மாவட்டங்களில் எதிரொலிக்கும். பட்டாசு போட்டு லட்டு கொடுத்து பஸ் ஸ்டாண்ட் முன்பு கொண்டாட்டம் அமர்க்களப்படும். அதுவும் இலை கட்சியில் என்ன நடந்தாலும், அதற்கு தென் மாவட்டங்களில் உடனடி ரியாக்‌ஷன் இருக்கும். ஆனால் தேனிக்காரருக்கு தற்போது வலு இல்லாத நிலையில், அவர் குக்கர்காரருடன் கை கோர்த்ததற்கு தென் மாவட்டங்களில் எந்த ரியாக்சனும் இல்லை. குறைந்தபட்சம் அவரது அணியினர் கூட இதுகுறித்து வாய் திறக்கவில்லை. தேனிக்காரர் அணியினர் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி கண்டுபிடிக்கும் நிலை தான் உள்ளதாம். அவர்கள் சேலம் போகிறார்களா அல்லது கட்சி தாவ இருக்கிறார்களா என்ற பேச்சே ஓடிக் கொண்டு இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷன் பெண் ஆபீசர் பெயரை கேட்டாலே நடுங்குறாங்களாமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல நாலு மண்டல அலுவலகம் இருக்காம். இங்கு, பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், தற்போது இருக்கிற பணியாளர்களுக்கும் ஊதியம் கொடுக்கிறாங்களாம். இதில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பென்சன், பிடித்த தொகை, பணியாளர்களுக்கு கடன் பெறும் சான்றிதழ் ஆகிய பணிகளை பெண் ஆபீசர் செய்து வருகிறாராம். இந்த பெண் ஆபீசர், ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை நிர்ணயிச்சு வச்சுருக்கிறாராம். மாமூலை கொடுத்தால்தான், பணியையே தொடங்குவாராம். மாமூல் கொடுக்கலைன்னா, அந்த சீட்டுல விண்ணப்பம் தூங்குமாம். சமீபத்தில ஓய்வு பெற்ற பணியாளர் தனக்கான பிடித்த தொகையை கேட்டு விண்ணப்பம் செய்தாராம். ஆனா அவரால மாமூலை கொடுக்க முடியல. குடும்பம் வறுமையில் வாடுதுன்னு சொல்லியும் அந்த பெண் ஆபிசர் கண்டுக்கவே இல்லையாம். இதனால் மனம் உடைந்த ஓய்வு பெற்ற பணியாளர் இறந்தே போயிட்டாராம்…’’ என்று வருத்தப்பட்டு சொன்னார் விக்கியானந்தா.
‘‘குக்கர் கட்சியின் போஸ்டர் யுத்தம் பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் கட்சி என்றாலே பொதுக்கூட்டம், போராட்டங்கள்னு நடத்துவதற்கு தொண்டர்கள் முக்கியம். தொண்டர்கள் இல்லையென்றால், ஆளில்லாத கடையில, யாருக்கு சார் டீ ஆத்துறீங்கன்னு ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி கேள்வி கேட்கக்கூடிய நிலைமையில குக்கர் கட்சி இருக்காம். அந்த கட்சியில இருந்த நிர்வாகிங்க பலரும், இப்ப கட்சியை விட்டு மாற்று கட்சிகளில் ஐக்கியமாகி வர்றாங்க. குறிப்பாக வெயிலூர் மாவட்டத்துல குக்கர் கட்சியில நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் இருக்கும் இடம் தெரியாம இருக்காங்க. இதனால் வெயிலூர் மாநகர்ல குக்கர் கட்சியில இருக்குற நிர்வாகிங்க, நாங்களும் கரண்ட்ல தான் இருக்கிறோம்னு காட்டி கொள்ள, அவங்களே காசு கொடுத்து, விதவிதமாக போஸ்டர் அடிச்சு பந்தா காட்டி வர்றாங்க. கூட்டம் நடத்தினா 10 பேர் கூட வர்றதில்லையாம். பேனர்ல மட்டும் 20, 30 நபர்களோட பெயர்களையும், படங்களையும் வரிசை கட்டி போட்டுவிடுறாங்க… இது பற்றி குக்கர் தலைவரிடம் சொன்னாலும், எலக்‌ஷன் வரை பொறுத்து இருங்க என்று ஆறுதல் சொல்றாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி இலை அமைச்சரை சேலம் அணிக்கு இழுக்க நடக்கும் பேரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: