தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் பேச்சு திருவண்ணாமலையில் குறைதீர்க்கும் முகாம்

திருவண்ணாமலை, மே 11: தமிழ்நாட்டில் காவல்துறையின் நடவடிக்கைகளால் குற்றச்சம்பவங்கள் குறைந்திருக்கிறது என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் வரவேற்றார். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமை, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கி.சங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் எஸ்பிக்கள், கமிஷனர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து புகார்களை பெறுகின்றனர். மேலும், ஏற்கனவே அளித்த புகார்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கிறோம். அதேபோல், புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகளில் திருப்தியில்லாதவர்களின் மனுக்கள் மீது, உயர் அதிகாரிகள் மறு விசாரணை செய்து நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த முகாமில் 420 பேர் புதியதாக மனு அளித்துள்ளனர். மேலும், ஏற்கனவே புகார் அளித்த 150 பேர் மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் விசாரணை நடத்தப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில், பணம் கொடுக்கல், வாங்கல் போன்ற கடன் பிரச்னைகள், சொத்து பிரச்னைகள் போன்றவையே அதிகம் வருகின்றன. அதற்கு, சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண்கிறோம். காவல்துறையால் எல்லா புகார்களுக்கும் தீர்வு காண முடியாது. நியாயமான தீர்வுக்காக முடிந்தவரை முயற்சி எடுக்கிறோம். காவல்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்ட தீர்வுகளை அளிக்கிறோம். எங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு உத்தரவிட முடியாத, சமரசத்துக்கு இடமில்லாத வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால வழக்கு விபரங்களின் அடிப்படையில் தற்போது 15 சதவீதம் குற்றச்சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் உள்ளது. பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்துவதன் மூலம், வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முகாமில், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் எம்.பழனி, ஸ்டீபன், டிஎஸ்பிக்கள் குணசேகரன், அண்ணாதுரை, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் புகார் மனுக்களை அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட சப்-டிவிஷன் டிஎஸ்பிக்கள் முன்னிலையில் விசாரணை நடந்தது. உயர்நிலை விசாரணை தேவைப்படும் மனுக்கள் மீது, எஸ்பி கார்த்திகேயன் நேரடி விசாரணை நடத்தினர். இந்த முகாம் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

The post தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் பேச்சு திருவண்ணாமலையில் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: