வேலூர் கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தினமும் 10 கிலோ கழிவுகள் தேக்கம்

வேலூர், மே 10: தினமும் 10 கிலோ கழிவுகள் தேங்குவதை தடுக்க வேலூர் கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை 137 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோட்டை வளாகத்தில் மைசூர் வீரர்களின் மஹால்கள் உட்பட 58 கட்டிடங்கள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சராசரியாக 3,000 பார்வையாளர்கள் தினமும் கோட்டைக்கு வருகிறார்கள். இருப்பினும், 10 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் வளாகத்தில் தேங்கி கிடக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலகு, கோட்டை பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களாக அறிவித்துள்ளது. கோட்டையில் பார்வையாளர்களை எச்சரிக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பலகைகளை வைத்துள்ளது. இதனை நடைமுறை படுத்தும் வகையில், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கோட்டை வளாகத்திற்குள் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்ய தொடங்கியுள்ளனர்.

தற்போது, கோட்டை வளாகத்தில் குப்பை சேகரிக்கும் பணி, வேலூர் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மட்டுமே பார்வையாளர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேற்கொண்டுள்ள அழகுபடுத்தும் பணியின் காரணமாக கோட்டைக்கு குறிப்பாக வேலூர் நகரத்திலிருந்து அதிக பார்வையாளர்கள் வருகை தருவதாக ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, கோட்டை நுழைவு வாயில் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறப்புக் குழுக்கள் காவல்துறையுடன் ஒருங்கிணைத்து வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிளாஸ்டிக் தடையை கோட்டை வளாகத்திற்குள் கண்டிப்பாக அமல்படுத்த தொடங்கியுள்ளது. கோட்டை நுழைவாயிலில் சிறப்புக் குழு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பதை சரிபார்த்து, அபராதம் விதிப்பது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தினமும் 10 கிலோ கழிவுகள் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: