திருவொற்றியூர் 14வது வார்டில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய பணி: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருவெற்றியூர்: திருவொற்றியூரில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை கலாநிதி வீராசாமி எம்.பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருவொற்றியூர் மண்டலம், 14வது வார்டுக்கு உட்பட்ட தாங்கல் புது தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்ததால், இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மணலி சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு, இந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதன் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கலாநிதி வீராசாமி எம்.பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தனர். நவீன கழிவறை, குடிநீர் போன்ற வசதிகளுடன் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கே.பி. சங்கர் எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர் நவீந்திரன், சிபிசிஎல் நிறுவன பொது மேலாளர் புருஷோத்தமன், திமுக மேற்கு பகுதி செயலாளர் அருள்தாசன், கவுன்சிலர் பானுமதி, திமுக நிர்வாகிகள் கார்த்திகேயன், சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் 14வது வார்டில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய பணி: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: