மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாஜ வேட்பாளர் கொலை மிரட்டல்: எப்ஐஆர் பதிவு செய்ய டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, பாஜ வேட்பாளர் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி தமிழ்நாடு டிஜிபியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளதாக, கர்நாடக மாநில பாஜ வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு டிஜிபியிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கையெழுத்திட்ட புகார் மனுவை, கட்சியின் மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பாஸ்கரன், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் ஆகியோர் டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து வழங்கினர். இதையடுத்து, மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குடும்பத்தினரை கொலை செய்வேன் என பாஜ வேட்பாளர் பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.

இது தொடர்பாக அனைத்து மாநில டிஜிபிக்களிடமும் பாஜ வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதேபோன்று தமிழ்நாட்டிலும் வழக்கு பதிவு செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம். கர்நாடகத்தில் பாஜவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று வந்துள்ளது. எனவே பாஜ மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை ஆடும் வகையில் இதுபோன்று பாஜ வேட்பாளர் பேசியுள்ளார் என்றார்.

The post மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாஜ வேட்பாளர் கொலை மிரட்டல்: எப்ஐஆர் பதிவு செய்ய டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.

Related Stories: