பலத்த சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கன மழை ஒரேநாள் இரவில் குளம், குட்டைகள் நிரம்பியது: பொன்னையில் 3 மணிநேரத்தில் 67 மி.மீ மழை பதிவு

பொன்னை, மே 9: பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் 3 மணிநேரம் கனமழை பெய்ததில் ஒரேநாள் இரவில் குளம், குட்டைகள் நிரம்பியது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. வேலூர் மாவட்டத்தில் நாள்தோறும் வெயில் சதமடித்து கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற பெரும் அச்சத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் அக்னி தொடங்கிய நாள் முதலே வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கருமேகம் சூழ்ந்து திடீரென பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொன்னை வள்ளிமலை மேல்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டது. பொன்னை வள்ளிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விவசாய நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றது.

இதையடுத்து நேற்று காலை 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 67 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பொன்னை வள்ளி மலை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் ஒரே நாள் இரவில் நிரம்பியுள்ளது. பொன்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விவசாய நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பலத்த சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கன மழை ஒரேநாள் இரவில் குளம், குட்டைகள் நிரம்பியது: பொன்னையில் 3 மணிநேரத்தில் 67 மி.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: