தூய்மை பணியாளர் நல வாரியம் திருத்தி அமைப்பு தலைவராக அமைச்சர் கயல்விழி நியமனம்: 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் அறிவிப்பு

சென்னை: தூய்மை பணியாளர் நல வாரியம் திருத்தி அமைக்கப்படுகிறது. வாரியத்தின் தலைவராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளர். 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 12 அலுவல் சாரா உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்ட அரசாணை: தூய்மை பணிபுரிவோருக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து, அவற்றின் முன்னேற்றத்தை உறுதி செய்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8.7.2021 அன்று நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வு கூட்டத்தில் தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை தலைவராகவும், கு.கோவிந்தராஜ் (ஐஏஎஸ் ஓய்வு) உபதலைவராகவும், 14 அலுவலர் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டு “தூய்மை பணிபுரிவோர் நல வாரியம்” திருத்தி அமைக்கப்படுகிறது. அலுவலர் சார்ந்த உறுப்பினர்களாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நிதித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, பள்ளி கல்வி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர்-ஆணையர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர், தாட்கோ மேலாண்மை இயக்குநர்-உறுப்பினர் செயல், பேரூராட்சி இயக்குநர்-ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குனர்-ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர்-ஆணையர் உள்ளிட்ட துறை செயலாளர்கள் 14 பேர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக, பூ.முக்கையன் (பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்), செ.ரமேஷ் (அரூர், நாமக்கல் மாவட்டம்), ரெ.விஜயசங்கர் (கோரம்பள்ளம், தூத்துக்குடி மாவட்டம்), க.குருநாதன் (வல்லம் சாலை, தஞ்சாவூர் மாவட்டம்), தே.கண்ணன் (விழுப்புரம் டவுன், விழுப்புரம் மாவட்டம்), பெ.தங்கவேல் (மேலவாசல், மதுரை மாவட்டம்), கு.மகாலிங்கம் திருமால்புரம் அஞ்சல், மதுரை மாவட்டம்), நா.சேகர் (பிச்சாண்டார்கோவில், திருச்சி மாவட்டம்), ஆர்.பி.மோகன் (அருள்வேலவன் நகர், ஈரோடு மாவட்டம்), சி.சீனிவாசன் (பாடி, சென்னை), ஜி.கே.ராஜன் (எ) கோவிந்தராஜன் (புளியந்தோப்பு, சென்னை), தி.அரிஷ்குமார் (ராஜாஜிபுரம், திருவள்ளூர் மாவட்டம்) ஆகிய 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

The post தூய்மை பணியாளர் நல வாரியம் திருத்தி அமைப்பு தலைவராக அமைச்சர் கயல்விழி நியமனம்: 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: