தொழிலாளர் தின ரேக்ளா ரேஸ் சீறிப்பாய்ந்த குதிரை, காளைகள்

மொடக்குறிச்சி : தொழிலாளர் தின விழாவையொட்டி மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரத்தில் ஈரோடு ரேக்ளா அசோசியேஷன் சார்பில் 17ம் ஆண்டு காளை, குதிரை பங்குபெற்ற ரேக்ளா போட்டி நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சாலை மாணிக்கம் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத் தலைவர் மயில் (எ) சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ரேக்ளா பந்தயத்தை மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ சிவசுப்ரமணி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த காளை, குதிரை ரேக்ளா எல்கை போட்டியில் ஒற்றைமாடு பந்தயம் 2 பிரிவாகவும், குதிரை வண்டி பந்தயம் 3 பிரிவுகளாகவும் நடைபெற்றது. அதில் பெரிய ஒற்றை மாடு போட்டியில் போகவர 8 மைல் தூரம் என கணக்கிடப்பட்டது. பெரிய குதிரை போக வர 10 மைல் தூரம் என போட்டி நிர்ணயம் செய்யப்பட்டது.

சிறிய ஒற்றை மாடு போட்டியில் போக வர 6 மைல் தூரம் என கணக்கிடப்பட்டு போட்டி நடைபெற்றது. சிறிய குதிரை போட்டியில் போக வர 8 மைல் தூரம் என போட்டியில் நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய குதிரைக்கு போட்டியில் போக வர 7 மைல் தூரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. ரேக்ளா பந்தயத்தில் சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள், குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி 4வது மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்ரமணியம், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், 46 புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தொழிலாளர் தின ரேக்ளா ரேஸ் சீறிப்பாய்ந்த குதிரை, காளைகள் appeared first on Dinakaran.

Related Stories: