கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு; ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்ற காவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மெத்தனால் விநியோகம் செய்த சிவகுமார், ஆலை உரிமையாளர் பென்சிலால், கவுதம் உட்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரை சிறையில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் விஷசாராயம் அருந்தி இதுவரை 58 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் கள்ளச்சாராய மொத்த வியாபாரிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்யும் நபர்கள் உள்ளிட்டோரை தொடர்ந்து கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரால் 14 நபர்கள் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் கைது செய்யப்பட்ட மெத்தனால் சப்ளை செய்த சிவகுமார் மற்றும் ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம் மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சடையன், ரவி செந்தில், ஏழுமலை உள்ளிட 7 பேரையும் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த 7 பேருக்கும் நீதிபதி ஸ்ரீராம் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் 2 பேர் மற்றும் முக்கிய குற்றவாளியான சிவகுமார் உள்ளிட்ட 7 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு; ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Related Stories: