வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்கொள்ள புதிய திட்டம்: மாநில கட்சிகளுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்

ஸ்ரீநகர்: வரும் மக்களவை தேர்தலில் பலமான மாநிலக்கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பலமாக இருந்தால், அங்கு அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்த்து அனைத்து கட்சிகளும் அவரது வேட்பாளர் வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும். பீகாரில் நிதிஷ்,தேஜஸ்வி யாதவ் கட்சிகள் பலமாக உள்ளதால் இதர எதிர்க்கட்சிகள் அந்த கட்சிகளின் வெற்றிக்கு தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

உபியில் சமாஜ்வாடி பலமாக உள்ளதால் அந்த கட்சி வெற்றி பெறுவதற்கு இதர கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தலில் பாஜவை தோற்கடிக்க பொதுவான எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருந்தால் வேறு கட்சிகள் அங்கு வேட்பாளரை நிறுத்தகூடாது. ஒரு தொகுதியில் மாநில கட்சிக்கு செல்வாக்கு இருந்தால் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். இதன் மூலமாகவேதான் பாஜவை தோற்கடிக்க முடியும். இந்த அணுகுமுறை பற்றி எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளேன். அவர்கள் இதை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.

The post வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்கொள்ள புதிய திட்டம்: மாநில கட்சிகளுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: