வண்டலூர் அருகே மந்தகதியில் நடைபெறும் தரைப்பால பணி; சாலையில் பறக்கும் புழுதி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் தரைப்பால பணியால் சாலையில் புழுதி பறக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையான கேளம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் 30க்கும் மேற்பட்ட கிராமப்புறங்கள் உள்ளன. இந்த சாலையில், மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள தடுப்புகள் வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால், 4 வழிச் சாலையான இந்த சாலையில், ரத்தினமங்கலத்துக்கும், கண்டிகை பகுதிக்கும் இடையே தலைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில், ஒரு மார்க்கத்தில் பாலப்பணி முடிவடைந்தநிலையில், மற்றொரு மார்க்கத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை முழுவதும் மண்புழுதி பறக்கிறது. இதில், புழுதி பறக்கும் இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றுவதும் கிடையாது. மேலும், அங்கு வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கி வைக்க பாதுகாப்பு பணியில் போக்குவரத்து போலீசாரும் இல்லை. இதில், எதிரும் புதிருமாக வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

மேலும், இரவு நேரங்களில் மணிக்கணக்கில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகின்றனர். இதனால், குறித்த நேரத்திற்குள் சென்று வர முடியாமல் பள்ளி மாணவர்கள், அன்றாட வேலைக்கு சென்று வருவோர் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வண்டலூர் அருகே மந்தகதியில் நடைபெறும் தரைப்பால பணி; சாலையில் பறக்கும் புழுதி: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: