வேலையில்லாமல் போராட்டம் நடத்துகிறார் திருமாவளவன் மீது தமிழிசை கடும் தாக்கு: தொண்டர்கள் கொந்தளிப்பு

புதுச்சேரி: ஜிப்மரில் ஏழை மக்களிடம் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் மீது தமிழிசை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இது, விசிக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் ஏழை மக்களிடம் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நேற்று விசிக சார்பில் ஜிப்மர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கவர்னர் தமிழிசை கூறுகையில், ‘புதுச்சேரிக்கும், தமிழகத்திற்கும் ஜிப்மர் முழுமையான சேவையை ஆற்றி வருகிறது. ஜிப்மர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து நோயாளிகளுக்கு இடையூறு செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏழை மக்களுக்கு ஜிப்மரில் கட்டணம் கிடையாது. 60 பரிசோதனைகளுக்கு கட்டணம் என்கிறார்கள்.

தமிழகத்தில் வேலையில்லை என்று புதுச்சேரியில் போராட்டம் நடத்துகிறார்கள். அங்குள்ள எம்பிக்கள் அந்தந்த ஊரிலேயே இருக்க சொல்லுங்கள். விழுப்புரம் எம்.பி. ஏன் இங்கு வந்து உட்கார்ந்துள்ளார். அவருக்கு முகவரி என்ன புதுச்சேரியா? முதலில் அவர்களது தொகுதி வேலையை பார்க்க சொல்லுங்கள். ஜிப்மரில் குறை இருந்தால் சொல்லுங்கள். அதை சரி செய்யலாம். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு செய்வது போல் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு எதுவும் இல்லை. விளம்பரம் வேண்டும் என்றால் தமிழகத்தில் வைத்து கொள்ளுங்கள். புதுச்சேரிக்கு வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்’ என்றார். தமிழிசையின் இந்த பேச்சு விசிக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வேலையில்லாமல் போராட்டம் நடத்துகிறார் திருமாவளவன் மீது தமிழிசை கடும் தாக்கு: தொண்டர்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: