சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து ஆறு வாரம் நெய் தீபம் ஏற்றி முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், ரியல் எஸ்டேட், உள்ளிட்ட தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கம் சார்பில் கிராம மக்கள் காவடி எடுத்தும், பெண்கள் 108 பால்குடம் தலையில் சுமந்தும் ஊர்வலமாக வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து முருக பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து சந்தனம்,தேன்,பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் சென்னை,திருவள்ளுர்,காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம், உள்ளிட்டவை வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.

The post சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: