உ.பி.யில் இரு பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தராக உள்ளார்.. பித்தம் தெளிய மருந்துண்டு ஆளுநரே! : சு.வெங்கடேசன்!!

சென்னை : பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துணை வேந்தர் நியமனங்களையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்றும் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக மசோதா உள்ளதாக தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “2 முறையும் பல்கலை. வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என கூறப்பட்டுள்ளதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதால் மசோதாவை ஏற்க முடியாது,” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உத்திரபிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ளார்.தமிழ்நாட்டின் Chief Minister of Tamil Nadu சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது“விதிகளுக்கு முரணானது.” என்கிறார் ஆளுநர்.பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!,” எனத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கவுதம புத்தா பல்கலைக்கழகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வேந்தராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உ.பி.யில் இரு பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தராக உள்ளார்.. பித்தம் தெளிய மருந்துண்டு ஆளுநரே! : சு.வெங்கடேசன்!! appeared first on Dinakaran.

Related Stories: