கோவையில் பிரபலமாகும் ஒட்டகப்பால் பண்ணை

வெற்றிக் கொடி கட்டு என்ற திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம் ஒட்டகப் பாலில் டீ போட நடிகர் வடிவேலு கூறும் நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அப்படி ஒரு ஒட்டகப் பால் டீ கடை, தென் இந்தியாவில் முதல் முறையாக கோவையில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒட்டகப் பாலில் டீ , காபி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் தான் இதனை நடத்தி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க ஒட்டகப் பால் குடித்தால் நன்மை என அறிந்து, ஒட்டகப் பால் வாங்கி குடித்து வந்ததுடன், ஒட்டகப் பால் குறித்து பதிவுகளையும் படித்து வந்துள்ளார்.சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக ஒட்டகப் பால் இருப்பதை அறிந்த மணிகண்டன், தன்னைப் போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என எண்ணி ஒட்டகப் பால் பண்ணை ஆரம்பிக்க முடிவு செய்தார்.

அரசு அனுமதி பெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து, நீலாம்பூரை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் சங்கமித்ரா என்ற பெயரில் ஒட்டகப் பண்ணை அமைத்து பால் விற்பனை செய்து வருகிறார். இது தவிர ஒட்டகத்தை காணவரும் மக்களை கவர்வதற்காக அங்கேயே குதிரை, முயல், வாத்து, மீன்களை வளர்த்துவருகிறார்.இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், நான் எம்.இ படித்து உள்ளேன். நானும், எனது மனைவி சுப்புலட்சுயும் கொரோனா இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டோம். அப்போது ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளதாக படித்தேன். வெளிமாநிலத்தில் இருந்து ஒட்டகப் பால் வாங்கி குடித்து வந்தேன். எங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தது. இதனால் குஜராத்தில் இருந்து அரசு அனுமதி பெற்று 6 ஒட்டகம் வாங்கி வந்தேன். ஆரம்பத்தில் எங்களின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த நினைத்தேன். பின்னர், அனைவருக்கும் பயன்பட வேண்டும் என எண்ணி இந்த ஒட்டகப் பண்ணையை ஆரம்பித்தேன். இதற்கு சங்கமித்தரா என பெயர் வைத்தோம். சங்கமித்தரா என்றால் சமுதாயத்தின் தோழி என பொருள். எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால் இங்கு சிரமமின்றி பராமரித்து வருகிறேன். இப்போது என்னிடம் 14 ஒட்டகம் உள்ளது. ஒட்டகப் பால் விரைவாக செரிமானம் ஆகும். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பால் குடித்துவந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். கேன்சர் நோயாளிகள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அளித்துவந்தால் செரிமானம் பிரச்சினை இருக்காது.

இதில், ஒரு சதவீதத்துக்கும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு ஒட்டகம் 4 முதல் 5 லிட்டர் பால் வரை கறக்கும். ஒரு லிட்டர் பால் ரூ.300-க்கு அளித்து வருகிறேன். இதற்கு இப்போது நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாட்டிலில் வைத்து கேரளா, தஞ்சாவூர், வேலூர், சென்னை, மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறேன். இங்கு ஒட்டகப் பால், டீ, காபி ரூ.70-க்கு விற்பனை செய்துவருகிறேன். ஒட்டகங்களில் இருந்து கறக்கப்படும் பாலைக்கொண்டு பால்கோவா, சாக்லேட் மற்றும் சோப்பு தயாரித்து விற்பனை செய்கிறேன். இது ரூ.50 ஆகும். ஒட்டக சோப் பயன்படுத்தினால் முகம் பொலிவாக இருக்கும். தவிர, பண்ணையில் கழுதை, ஆடுகள் வளர்க்கப்பட்டு அதன் பாலும் விற்பனை செய்துவருகிறேன்.

மேலும், தொட்டியில் மீன், வாத்து, ஆடு, வான்கோழி, சேவல், கறுப்புக் கோழி உள்ளிட்ட 7 வகை கோழி, முயல், வெள்ளைஎலி, நத்தை, நண்டு போன்றவையும் வளர்த்து வருகிறேன். இங்கு வளர்க்கப்படும் மீன், கோழி, வாத்து, நண்டு ஆகியவை நேரடியாக பிடித்து உணவு சமைத்து விற்பனை செய்கிறோம். இதுபோன்ற உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஒட்டகச் சவாரியும் உள்ளது. தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு கிளை ஆரம்பித்து உள்ளேன். தமிழகம் முழுவதும் ஒட்டகப் பால் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டகப் பால் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கோவையில் பிரபலமாகும் ஒட்டகப்பால் பண்ணை appeared first on Dinakaran.

Related Stories: