இறந்த ஓய்வூதியர்கள் கணக்கில் ரூ.95 லட்சம் எடுத்த வாரிசுதாரர்கள்; போலீசில் புகார்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சார்நிலை கருவூல அலுவலகம் உள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிய ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நேர்காணல் நடத்தப்படும். கொரோனா காரணமாக 2020, 2021ல் இது தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் வழக்கமான நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை சார்நிலை கருவூலகத்தில் 30க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வராதது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிபார்த்தபோது 2020 – 2021, 2021 – 2022 ல் வெவ்வேறு தேதிகளில் இறந்திருப்பது தெரியவந்தது. ஆனால் இறந்த ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.95 லட்சம் வரை ஓய்வூதிய தொகையை அவர்களது வாரிசுதாரர்கள் எடுத்துள்ளனர்.

உடனடியாக அவர்களிடம் தொடர்புகொண்டு, ஓய்வூதிய தொகையை எடுத்தது குற்றச்செயலாகும் என்ற விபரத்தை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் 20க்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய தொகையை அரசு கணக்கில் செலுத்திவிட்டனர். ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டும் ரூ.15 லட்சம் வரை செலுத்தவில்லை. இதுகுறித்து உதவி கருவூல அலுவலர் சரவணன், அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து உதவி கருவூல அலுவலர் சரவணன் கூறுகையில், ‘‘ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் காலமாகி விட்டால் ஓய்வூதியர்களின் சட்டப்பூர்வமான வாரிசுகள் சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியர் இறந்த பிறகு அவரது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுப்பது சட்ட விரோதம். தகவல் தெரிவிக்காமல் மீறி எடுத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

The post இறந்த ஓய்வூதியர்கள் கணக்கில் ரூ.95 லட்சம் எடுத்த வாரிசுதாரர்கள்; போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: