ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ காரை விரட்டி செருப்பு வீச்சு: சொந்த கட்சியினரே எதிர்த்ததால் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், சத்யசாய் மாவட்டம், பெனுகொண்டா தொகுதி எம்எல்ஏவுமான சங்கரநாராயணாவுக்கு சொந்த கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சத்யசாய் மாவட்டம் சோமண்டேபள்ளி மண்டலம் எய்டபாலபுரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரேணுகா நகரில் நேற்று முன்தினம் நடந்த ‘வீட்டுக்கு வீடு நமது அரசு’ என்ற நிகழ்ச்சிக்காக எம்எல்ஏ சங்கர நாராயணா சென்றபோது அப்பகுதியினர் அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ‘ரேணுகா நகரில், 5 மாதங்களாக ரேஷன் அரிசி வழங்கவில்லை. சாலை, வடிகால் வசதி செய்து தரவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் எம்எல்ஏ வளர்ச்சி பணிகள் செய்யவில்லை’ எனக்கூறி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இருந்தும் கிராம மக்கள் ஊருக்குள் வரவிடாததால் எம்எல்ஏ சங்கர நாராயணா அங்கிருந்து காரில் ஏறி செல்ல முயன்றார். காரில் ஏறி வாகனத்தில் எம்எல்ஏ புறப்படும்போது பின்னால் இருந்து கிராம மக்கள் துரத்தி சென்று பலர் செருப்புகளை வீசினர். எம்.எல்.ஏ மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ காரை விரட்டி செருப்பு வீச்சு: சொந்த கட்சியினரே எதிர்த்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: