முகமது ஷமி வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிடல்ஸ்: மானம் காத்தார் அமான் கான்

அகமதாபாத்: நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஃபில் சால்ட், வார்னர் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சால்ட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே வார்னர் 2 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ரைலீ ரூஸோ 8 ரன், மணிஷ் பாண்டே 1 ரன், பிரியம் கார்க் 10 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் பிடிபட்டனர். டெல்லி கேப்பிடல்ஸ் 5 ஓவரில் 23 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், அக்சர் படேல் – அமான் ஹகிம் கான் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. அக்சர் படேல் 27 ரன் எடுத்து (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) மோகித் வேகத்தில் ரஷித் கான் வசம் பிடிபட்டார்.

அடுத்து அமான் கானுடன் இணைந்த ரிபல் படேல் அதிரடி காட்ட, டெல்லி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அமான் கான் 51 ரன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரஷித் கான் சுழலில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிபல் படேல் 23 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து மோகித் பந்துவீச்சில் ஹர்திக் வசம் பிடிபட்டார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. அன்ரிச் (3), குல்தீப் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ஷமி 4 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மோகித் 2, ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 131 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

The post முகமது ஷமி வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிடல்ஸ்: மானம் காத்தார் அமான் கான் appeared first on Dinakaran.

Related Stories: