பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி

 

குடியாத்தம், மே 1: பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொடடி, நேற்று வெள்ளி காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி நடைபெறும். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு மே 14ம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 15ம் தேதி சிரசு திருவிழாவும் நடைபெற உள்ளது. முன்னதாக, விழாவையொட்டி கடந்த மாதம் பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, சிரசு திருவிழாவில் முக்கிய நிகழ்வான காப்பு கட்டுதல் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு குடியாத்தம் தென்குளக்கரையில் இருந்து வாணவேடிக்கையுடன் தொடங்கியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் மேளதாளம் இசை வாத்தியத்துடன் பூக்கடை பஜார், காந்தி ரோடு, 5 மண் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக கெங்கையம்மன் கோயிலை சென்றடைந்தது. தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, சிரசு எடுப்பவர், கோயில் நிர்வாகி உள்ளிட்டோர் காப்பு கட்டி கொண்டனர். மேலும், வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

நள்ளிரவில் தொடங்கிய காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் பூங்கரகம் அதிகாலை வரை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, நேற்று மாலை அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: