2025ம் ஆண்டுக்குள் இந்திய தடுப்பூசிகளின் சந்தை 25,000 கோடியை எட்டும்: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி:  2025ம் ஆண்டுக்குள் இந்திய தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு ரூ.25,000 கோடியை எட்டும் என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் குழுவுடன் 6 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.அங்கு நேற்று லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான அரங்கத்தையும் டாக்டர்.ஜிதேந்திர சிங் பார்வையிட்டார். அப்போது உயிரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தடுப்பூசிகள் தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “ உலகின் முக்கிய உயிரி அறிவியல் பொருளாதார நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் திறன்களை உலக நாடுகள் உணர்ந்துள்ளன.உலகின் பிற நாடுகள் தற்போதும் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கொரோன காலத்தில் இந்தியா இரண்டே ஆண்டுகளில் 4 தடுப்பூசிகளை தயாரித்தது.

அண்மையில் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயான பாப்பிலோமா வைரசை தடுக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளன.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை ‘மிஷன் கோவிட் சுரக்‌ஷா’ இயக்கத்தின் மூலம 4 தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு விநியோகம் செய்தது. உலக அளவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இந்தியாவின் தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு 2025ம் ஆண்டுக்குள் ரூ.25 ஆயிரம் கோடியை எட்டும்” என்று தெரிவித்தார்.

The post 2025ம் ஆண்டுக்குள் இந்திய தடுப்பூசிகளின் சந்தை 25,000 கோடியை எட்டும்: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: