பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் 186 இளம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா

சென்னை: பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இளம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், வங்கதேச ராணுவ தலைமை அதிகாரி ஷப்யூதின் அமீது சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) 11 மாதம் பயிற்சி பெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு விழா நேற்று காலை நடந்தது. இந்த பயிற்சி மையத்தில், இந்தியாவை சேர்ந்த 121 வீரர்களும், 36 வீராங்கனைகளும், நட்பு நாடான பூடானை சேர்ந்த 5 வீரர்களும் 24 வீராங்கனைகளுமாக மொத்தம் 186 பேர் பயிற்சி பெற்றனர்.

பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு விழாவில் வங்கதேச ராணுவத்தின் தலைமை அதிகாரி ஷப்யூதின் அமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளம் ராணுவ அதிகாரிகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது, வானத்தில் வட்டமிட்டபடி வந்த ஹெலிகாப்டரில் இருந்து, பல வகையான வண்ண மலர்கள் தூவப்பட்டது. சிறப்பாக அணிவகுப்பினை நடத்திய வீரர்கள் அஜெய்சிங் கில்லுக்கு கவுரவ வாள் மற்றும் தங்கப்பதக்கமும், அஜய்குமாருக்கு வெள்ளி பதக்கமும், மெஹக் சைனிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

ராணுவ அணிவகுப்பு மரியாதை முடிந்ததும், பயிற்சி முடித்த ராணுவ இளம் ராணுவ அதிகாரிகள் ஆரவாரத்துடன் ஒருவரை ஒருவர் கட்டி அரவணைத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். பின்னர், ராணுவ அதிகாரிகள் முன்னிலையில், இளம் ராணுவ வீரர்களின் தோள்பட்டையில் மறைத்து இருந்த ஸ்டாரை அவர்களது பெற்றோர் திறந்து வைத்து கட்டி அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்னர் இசைக்கு ஏற்ப நடனமாடியும், தங்களது தொப்பியை வானத்தில் தூக்கி போட்டு பிடித்தும், ஒன்றாக தரையில் படுத்து மண்ணை முத்தமிட்டும் தேசபக்தி பாடலை பாடினர். இது, அங்கு குழுமி இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

The post பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் 186 இளம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: