மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்வில் பங்கேற்க உ.பி-யில் இருந்த டெல்லி வந்த சுய உதவி குழு பெண்ணுக்கு குழந்தை பிறப்பு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

புதுடெல்லி: மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்ததால், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், சமூக சேவகர்கள், விருது பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். நூறாவது மனதின் குரல் சிறப்பு நிகழ்வு நாளை (ஏப். 30) நடைபெறுகிறது. இதற்காக டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 100 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர்களில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த சுயஉதவிக் குழு உறுப்பினரான பூனம் தேவி என்ற பெண்ணும் அடங்குவார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சிக்காக பங்கேற்க வந்தார். டெல்லி வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், உடனடியாக டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பூனம் தேவியின் குடும்பத்தினர் கூறுகையில், ‘பிரதமரின் நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில், எங்களது குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

வீணாகும் வாழைத் தண்டுகளிலிருந்து நாரை பிரித்தெடுத்து கைப்பைகள், பாய்கள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்யும் பணியை பூனம் தேவி மேற்கொண்டார். அதனால் அவரை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். அந்த வகையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது’ என்றனர். முன்னதாக நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்வில் பங்கேற்க உ.பி-யில் இருந்த டெல்லி வந்த சுய உதவி குழு பெண்ணுக்கு குழந்தை பிறப்பு: குடும்பத்தினர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: