பசவராஜ் பொம்மை முதல்வராக இருக்கும் நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சி.டி.ரவி?.. தேர்தல் நேரத்தில் ஈஸ்வரப்பாவின் திடீர் பல்டியால் சலசலப்பு

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கும் நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சி.டி.ரவி என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியது, கர்நாடக தேர்தலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், வரும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் சார்பில் ராகுல், பிரியங்கா போன்ற தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (தான் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்தவர்), சிவமொக்காவில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் பேசியபோது, ‘எங்களுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டு கூட வேண்டாம். தேசிய சிந்தனை கொண்ட முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, வருங்காலத்தில் கர்நாடகா முதல்வராக வருவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர்’ என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கும் நிலையில், அவரையே முன்னிலைப்படுத்தி பாஜக தேர்தல் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் சி.டி.ரவி, அடுத்த முதல்வராக வரவாய்ப்புள்ளது என்ற அர்த்தத்தில் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை. கட்சியின் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. சி.டி.ரவி சிறந்த தலைவராகவும், சிறப்பாக கட்சிப் பணியை ஆற்றி வருகிறார் என்று தான் பேசினேன்’ என்று கூறினார். கே.எஸ்.ஈஸ்வரப்பா திடீர் பல்டி அடித்ததால், கர்நாடகா பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

The post பசவராஜ் பொம்மை முதல்வராக இருக்கும் நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சி.டி.ரவி?.. தேர்தல் நேரத்தில் ஈஸ்வரப்பாவின் திடீர் பல்டியால் சலசலப்பு appeared first on Dinakaran.

Related Stories: