திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

திண்டிவனம்: “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.4.2023) நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது; ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம், கோடை காலத்தில் கிராமப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி குடிநீர் கிடைத்திட தக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் கிராம சாலைத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இந்த ஒன்றியத்திற்குட்பட்ட 52 பஞ்சாயத்துகளிலும் வேலை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கான ஊதியத்தை எவ்வித தாமதமின்றி உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர், இப்பதிவேட்டில் பணிபுரியும் நபர்களின் பெயர், வேலை செய்யும் நாட்கள், வழங்கப்படும் ஊதியம் ஆகியவை குறித்த விவரங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றும், இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து வீடு கட்டும் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு..! appeared first on Dinakaran.

Related Stories: